சர்ச்சில் இந்தியா மீது கொண்ட வெறுப்பு ”வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தாலும், போரில் உதவ மறுத்த காங்கிரஸாலும், எதிரியுடன் சேர்ந்து ராணுவப்போராட்டம் தொடங்கிய சுபாஷ் போஸாலும் பல மடங்கு அதிகரித்தது.
1942-இன் இறுதியில் வங்காளத்தைப் புயல்தாக்கியதில் கரையோர நெல்வயல்களெல்லாம் அழிந்துபோயின. முப்பதாயிரம் மக்கள் இறந்தனர். புயலின் விளைவாக உருவான பயிர் நோய்களில் மொத்த வங்க நெல் அறுவடையில் 20 சதவீதம் அழிந்தது. வங்காளத்தில் பஞ்சம் தொடங்கியது.
1942 பிப்ரவரியில் ஜப்பான் சிங்கப்பூரை ஏழே நாட்களில் கைப்பற்றி வரலாறு காணாத அளவுக்கு இங்கிலாந்து தலைமையிலான எண்பதாயிரம் நேசப்படை வீரர்களைச் சிறைப்பிடித்தது. மார்ச் மாதம் பர்மாவின் ரங்கூனும் வீழ்ந்தது. பிரிட்டிஷ் வங்காளம் ஜப்பானின் கையருகில் இருந்தது. ரங்கூனை விட்டு வெளியேறிய பிரிட்டிஷ் துருப்புகள் ரங்கூனை எரித்துச்சாம்பலாக்கி விட்டு வெள்ளையர்களை மட்டும் தப்பியோடவிட்டனர். ஜப்பானியர் கையில் மற்ற போர்வீரர்களை ஒப்புக்கொடுத்துவிட்டு, தப்பியோட முடியாத வகையில் படகுகளையும் அழித்து விட்டனர்.
பர்மாவிடமிருந்து இந்தியா ஒவ்வொரு வருடமும் இருபது லட்சம் டன் அளவுக்கு அரிசி இறக்குமதி செய்து வந்தது. பர்மா ஜப்பான் கைக்குப்போனபின் பஞ்சம் தொடங்கியபோது, பர்மாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த அரிசியும் வங்காளத்திற்கு இல்லாமலானது.
போர்ப்பயிற்சி மிக்க வீரர்களையும் தலைமைகளையும் ஐரோப்பிய போர்முனைகளுக்கு அனுப்பி இருந்ததில், இந்தியாவின் ராணுவ தரப்பு வெகு பலவீனமாக இருந்தது. இந்நிலையில் பிரிட்டனின் போர்க்கால அமைச்சரவை, பர்மாவைப் போலவே ஜப்பான் வங்கக் கடலோரத்தையும் தாக்கக்கூடும் என்று பயந்தது. ஆனால் ராணுவத்தை வைத்து கடற்கரைப்பகுதிகளைக் காப்பதற்கு மாறாக, ஜப்பான் உள்ளே வந்து விடுவதைத் தடுக்க முடியாது என்றே முடிவு செய்து, எரிதரைக்கொள்கையை (scorched earth policy) அமல்படுத்தியது.
அதன் விளைவாக ராணுவமும் பிரிட்டிஷ் போலீஸும் இணைந்து வங்கக்கடலோரப்பகுதிகளில் இருந்த நெற்பயிர்கள், அவற்றை வினியோகிக்க உதவும் போக்குவரத்துப்பொருட்கள் அத்தனையையும் அழித்தனர். படகுகளைப் பறிமுதல் செய்து உடைத்தெறிந்தனர். வங்காள கடற்கரைப்பகுதிகளில் ஏழைகளுக்கு சுலபமாய்க் கிடைக்கும் படகுப்போக்குவரத்தை நாசமாக்கினக்கினர். பானை செய்யும் குயவர்கள் களிமண் நிலங்களுக்குப்போகும் நீர்வழிப்பாதைகள் இல்லாமலாயின. மீன் பிடித்தொழில் நசிந்தது. ஏழைகள் இடம்பெயரவும் அவர்களுக்கு உணவு சென்றடைவதற்கான எளிய விநியோக வழிகளும்கூட அடைபட்டன. விமானம் தரையிறங்க பாதைகள் அமைக்க என்று 35000 குடும்பங்கள் அவர்களது கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
படையெடுத்து வரும் ஜப்பானியர்கள் சாப்பிட ஏதும் கிடைக்கக்கூடாதல்லவா? எனவே, வங்காள இந்தியக்குடும்பங்கள் பசியால் பட்டினியால் கிராமம் கிராமமாக மடிந்து வந்த காலத்தில், பல ஆயிரம் டன் அரிசி வங்கக் கடலில் கொட்டப்பட்டது. போதாதற்கு எந்த விலை கொடுத்தும் நெல் வாங்க பிரிட்டிஷ் அரசு தயார் என அறிவித்ததில், இருந்த கையிருப்பு நெல்லின் விலையும் சாதாரணர்கள் வாங்க முடியாத அளவுக்கு சட்டென்று உயர்ந்தது. இவ்வாறு பட்டினியால் இறந்தவர்களின் வயிற்றின்மேல் ஏறி நின்றுகொண்டு கொள்முதல் செய்யப்பட்ட 40000 டன் நெல், பின்னர் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
பட்டினிச்சாவுகள் அதிகரித்துக்கொண்டே வந்த அதே நேரத்தில் இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட உணவுப்பொருட்களில் ஒரு பகுதி பிரிட்டிஷாரால் அரசு கோடவுன்களில் பதுக்கப்பட்டது. மீதி கிழக்கு ஐரோப்பிய பால்கன் பிரதேசத்தில் இங்கிலாந்து வென்ற பகுதிகளின் மக்கள் பசியால் வாடிவிடக்கூடாதென்று அவர்களுக்கு அனுப்பப்பட்டது.
அதே நேரத்தில் காலனீய அரசு இந்திய மில் முதலாளிகள் மீது பதுக்கல் குற்றச்சாட்டை அரசு பிரசாரம் மூலம் பரப்பியது. பதுக்கல் இல்லாமல் இல்லை. ஆனால், அதற்கும் சர்ச்சிலின் இந்திய வெறுப்புக்கொள்கையே காரணமாக இருந்தது. இரண்டு காரணங்களைக் காட்டலாம்:
ஒன்று, இந்திய தானியங்களுக்கு கிடைக்கும் பணத்தின் மதிப்பு மீதான நம்பிக்கை அடி வாங்கியது. இரண்டாவது, பஞ்சம் வந்தால் அரசு தானியங்களை மக்களுக்கு வினியோகம் செய்து காப்பாற்றும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லாமல் போனது. பொதுவாக பேரிழப்பு நேரங்களில் அரசாங்கம் குடிமக்களுக்குக் தாமதமானாலும் கைகொடுத்துக் காக்கும் என்பது ஓர் அடிப்படை நம்பிக்கை. அந்த நம்பிக்கை இல்லாமல் போகும் நிலையில், எதிர்காலம் குறித்த நம்பிக்கை இழப்பும் பாதுகாப்பின்மையும் வலுவடைகிறது.
சர்ச்சிலின் காலனீய பிரிட்டிஷ் அரசு பஞ்சத்தின் பட்டினி சாவுகளிலிருந்து இந்தியர்களின் உயிரைக்காக்க முன்வரும் என்கிற நம்பிக்கை யாருக்குமே அன்று இல்லாமல் போனது. விளைவு, கையிருப்பு உணவுப்பொருட்கள் அனைத்தையும் அரசுக்கும் தெரியாமல் பதுக்கத்தொடங்கினர். (அரசுக்குத்தெரிந்தால் அதைப்பறித்து அரசே பதுக்கும், அல்லது ஐரோப்பிய வெள்ளை நாடுகளின் பசி போக்க அதை அனுப்பி வைக்கும்).
1943 மார்ச் மாதத்தில் வங்காள கிராமங்களில் பட்டினிச்சாவுகள் அதிகரிக்கத்தொடங்கின. உலகத்துக்கே துணி வழங்கிய வங்க கிராமங்களின் பெண்கள் உடுத்த கோடித்துணியின்றி குடிசைக்குள் அடைந்தனர். முறைவைத்து உடைமாற்றி வெளியில் சென்று வந்தனர்.
வங்காளத்தின் கிராம மக்கள் நடைப்பிணங்களாக கூட்டம் கூட்டமாக கல்கத்தா வரத்தொடங்கினர். கல்கத்தா தெருக்கள் பிணங்களால் நிரம்பின. அத்தனை பட்டினியிலும் கல்கத்தாவின் உணவுக்கிடங்கோ அரிசிக்கடைகளோ தாக்கப்படவில்லை. பெரும் வன்முறை எதுவுமே நிகழவில்லை- குழந்தைகளும், பெண்களும், முதியோரும் ஆதரவின்றி தெருவோரங்களின் இறந்து நாய்களால் கடித்துக்குதறப்படுவதைத் தவிர[2].
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, – ஏன், ஜப்பானும், சுபாஷ் போஸும் கூட – வங்கத்திற்கு அரிசி அனுப்ப முன்வந்தும் சர்ச்சிலின் அரசு அதை ஏற்க மறுத்தது. நேச நாடுகளால் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளின் மக்களைப் பசியிலிருந்து காக்க எடுக்கப்படும் முனைப்புகளின் சிறு சதவீதத்தைக்கூட போருக்கு உணவையும் தளவாடங்களையும், வீரர்களையும் தந்த இந்தியாவின் மக்களைப்பட்டினிச்சாவிலிருந்து காக்க சர்ச்சிலின் அரசு தரவில்லை.
நேச நாடுகள் இந்தியாவிற்கு உணவுப்பொருட்கள் அனுப்ப முன்வந்த போது அதனை எடுத்துச்செல்ல கப்பல்கள் கிடையாது என்று அனுமதி மறுத்தது சர்ச்சிலின் அரசு. ஆனால், உண்மையில் இங்கிலாந்தின் உணவுக் கிடங்குகள் இடமின்றி நிரம்பி வழிந்தன. தார்ப்பாய் மூடப்பட்டு வெளியே கிடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான உணவு தானியங்கள் அழுகிப்போயின.
1943 ஜுலை மாதம் இந்திய வைஸ்ராய் லின்லித்கொவ் வருட இறுதிக்குள் 500,000 டன் கோதுமை வழங்காவிட்டால் அடுத்த அறுவடைக்காலம் வரை இந்திய ராணுவம் கூடத்தாக்குப்பிடிக்க முடியாதென்று வேண்டுகோள் விடுத்தார். ஆகஸ்ட் மாதம் நாலாம் நாள் கூடிய போர்க்கால மந்திரிசபையின் கூட்டத்தில் சர்ச்சிலும் அவரது சகாக்களும் சேர்ந்து இந்தியாவிற்கு ஒரு கப்பல் உணவுகூடப்போகக்கூடாது என்று முடிவெடுத்தனர்.
மாறாக தென்கிழக்கு ஐரோப்பாவிற்கு உணவுப்பொருட்களைக் கொண்டு சென்று சேமித்து அந்த நாடுகளுக்கு வினியோகம் செய்ய போர் மந்திரி சபை முடிவெடுத்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து ஒவ்வொரு மாதமும் 75000 டன் கோதுமை இலங்கை வழியாகக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டது. அதில் ஒரு டன் கூட இந்தியாவுக்குத் தரப்படவில்லை. இன்னமும் ஒரு 1,70,000 டன் போர் முடிந்ததும் வினியோகம் செய்ய என்று மத்தியதரைக்கடல் பகுதியில் பாதுகாக்கப்பட்டது. அதாவது போர் முடிந்தபின் ஐரோப்பாவைப் பசியிலிருந்து காக்க இந்திய மக்களைப் பட்டினிச்சாவுகளுக்கு பலி கொடுத்தது சர்ச்சிலின் அமைச்சரவை. கிரேக்கர்களைப் பாதுகாப்பது ”முயல் கூட்டம் போல் இனப்பெருக்கம் செய்யும்” வங்காளிகளைக் காப்பதை விட முக்கியம் என்று விளக்கினார் பிரிட்டிஷ் பிரதமர்.
இதே காலகட்டத்தில் பிரிட்டனின் 48 லட்சம் (அதாவது இந்திய ஒட்டு மொத்த ஜனத்தொகையில் எட்டில் ஒரு பகுதி) மக்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள்: 40 லட்சம் டன் கோதுமை 14 லட்சன் டன் சர்க்கரை 15 லட்சம் டன் மாமிசம், 3 லட்சம் டன் மீன், ஏறக்குறைய ஒன்றரை லட்ச டன் அரிசி, 2 லட்சம் டன் டீ, 10 லட்சம் கேலன் வைன்(wine).
தொடர்ந்து இந்தியச்செயலர் லியோ எமெரி முயன்றதில் 500,000 டன் கோதுமைக்குப்பதில் 80,000 டன் கோதுமை 1943-ம் வருட இறுதியில் (அதாவது கேட்டதில் 16%) அனுப்பப்பட்டது. ஆனால் 1943 இறுதியில் வங்காள நிலங்கள் அமோக விளைச்சல் கண்டன. பஞ்சம் முடிவுக்கு வந்தது. அதற்குள் வங்காளத்தில் மட்டும் 30 லட்சம் பேர் பஞ்சத்திற்கு ஏற்கனவே பலியாகி இருந்தனர். ஆறு வருட காலத்தில் அறுபது லட்சம் யூதர்கள் ஹிட்லரின் நாசி ஜெர்மனியால் கொல்லப்பட்டனர். ஒரே வருடத்தில் சர்ச்சிலின் பிரிட்டிஷ் அரசின் இந்திய இன வெறுப்பு 30 லட்சம் இந்தியர்களைப் பட்டினிச்சாவுகள் மூலம் பலி வாங்கியது. போர்முடிந்தவுடன் உலகமெங்கும் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவிலிருந்து அள்ளிப்பதுக்கிய தானியக்கிடங்குகளில் இருந்து உணவுப்பொருட்களை விற்று நல்ல லாபம் கண்டது.
இந்தப்பட்டினிச்சாவுகள் பற்றி உலகிற்கே தெரிந்திருந்தது. ஆனால் சர்ச்சில் இதை முழுமையாக தன் கவனத்திலிருந்து உதாசீனப்படுத்தி ஒதுக்கித்தள்ளியிருந்தார் ஏனெனில் அந்த உதாசீனத்திற்கு அவர் ஒரு விலையும் தரவேண்டிய அவசியம் இருக்கவில்லை.
சர்ச்சில் என்ற தனிமனிதரின் இந்திய வெறுப்பைத் தனக்குள்ளும் தேக்கிய ஆயிரக்கணக்காக பிரிட்டிஷ் அதிகாரிகளும் அவர்களின் இந்திய அடிமைகளும் இந்தப் படுகொலையில் பங்கேற்றவர்கள்தான். ஆனால் தலைமைப்பொறுப்பில் இருந்தவர் என்கிற வகையில் சர்ச்சில் செய்தது கலப்படமற்ற இனவெறுப்பில் விளைந்த விஷயம் என்று நம்ப பல சான்றுகள் உள்ளன. இந்திய அரசின் செயலர் லியொபொல்ட் எமெரியிடம் வெளிப்படையாகவே இவ்வாறு கூறினார்: ”நான் இந்தியர்களை வெறுக்கிறேன். காட்டுமிராண்டி மதத்தைப்பின்பற்றும் காட்டுமிராண்டி மக்கள் அவர்கள்… பஞ்சம் உருவாவதெல்லாம் அவர்களது சொந்தத் தவறினாலேயே” என்று இந்திய மக்கள் தொகைப்பெருக்கத்தைக் காரணம் காட்டினார். இந்தியாவின் பட்டினி சாவுகளைப்பற்றி சொன்ன போது, ”பின் ஏன் காந்தி இன்னமும் சாகவில்லை?” என்று கேட்டார். “அழிந்து போய்த்தொலைந்திருக்க வேண்டிய இந்துக்கள் இனப்பெருக்கத்தால் மட்டுமே உயிர்வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்” என்று வெறுப்புமிழப்பேசிய சர்ச்சில் பிரிட்டிஷ் குண்டுவீச்சு கமாண்டர் ஆர்தர் ஹாரிஸ் ”போரில் ஈடுபட்டதுபோக மீதமுள்ள விமானங்களை அனுப்பி குண்டு வீசி அவர்களை அழித்தால் நன்றாயிருக்கும்” என்றும் கருத்துத் தெரிவித்தார்.
பஞ்சம் தொடங்கியவுடன் சர்ச்சில் தலைமையிலான பிரிட்டிஷ் காலனீய அரசு நடந்து கொண்ட முறை ஹிட்லரின் யூத இனவெறிக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை. யூத வெறுப்பாளர்கள் யூதர்களைத் திட்டும் வசை வார்த்தையைக்கொண்டு “இரக்கமற்ற லேவாதேவிக்காரர்கள்” என்று காங்கிரஸ்காரர்களையும் இந்துக்களையும் குறிப்பிட்டார் சர்ச்சில். யுத்த காலத்தில் இந்திய செயலராக இருந்த எமெரி தன் வரலாற்றுக்குறிப்பில் சர்ச்சிலை ஹிட்லருடன் ஒப்பிட்டுப்பேசுகிறார். இந்தியாவிற்கு உணவு அனுப்பக்கேட்டு வந்த எமெரியை ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகப்பேசாமல் “இந்திய லேவாதேவிக்காரர்களுக்கு” ஆதரவாகப்பேசுவதாக ஏசுகிறார் சர்ச்சில். அதைக்கேட்டு ஆத்திரமடைந்த எமெரி சர்ச்சிலிடம் ” பொதுநோக்கில் ஹிட்லருக்கும் உங்களுக்கும் ஒன்றும் அதிக வித்தியாசம் தெரியவில்லை” என்று பதிலடி கொடுக்கிறார். (எமெரி இந்தியாவில் பிறந்தவர்; அவரது தாய் ஒரு யூதர்).
இந்தியாவின் கையிருப்பில் இருந்த ஸ்டெர்லிங் பணத்தை வைத்து பஞ்சம் தீர்க்க உணவை இறக்குமதி செய்யக்கூட இந்தியாவிற்கு அனுமதி மறுத்திருக்கிறார் சர்ச்சில். இந்தியாவின் வைஸ்ராயாய் இருந்த வேவல் பிரபு, “இந்தியாவை, இந்தியா தொடர்பான அத்தனை விஷயங்களையும் சர்ச்சில் வெறுப்ப”தாகவும், ”பொறுப்பற்றதாகவும், பகைமையும் காழ்ப்பும் நிறைந்ததாகவும் இந்தியா குறித்த அவரது நடத்தை இருக்கிறது” என்றும் குறிப்பிடுகிறார்