Tuesday, 8 August 2017

இந்தியாவிடம் கடன்பட்ட பிரிட்டிஷ் அரசு

இரண்டாம் உலகப்போருக்கு
 இங்கிலாந்தின் ஆகப்பெரும் உற்பத்தி மற்றும் விநியோகக் கேந்திரமாக இந்தியா விளங்கியது. 

ஆறு லட்சம் மைல் அளவுக்கு பருத்தித்துணியை இந்தியா இங்கிலாந்துக்கு உற்பத்தி செய்து தந்தது. இதைக்கொண்டு 20 லட்சம் பாராசூட்டுகளும் 40 கோடிக்கும் அதிகமான ராணுவ உடைகளும் தைக்கப்பட்டன. இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டு உற்பத்தியும் பாராசூட்டுகள் செய்ய உபயோகப்படுத்தப்பட்டன. இந்தியாவின் கம்பளி உற்பத்தி ஒன்றரை கோடிக்கும் அதிகமான சீருடைகளுக்கும் 50 லட்சம் போர்வைகளுக்கும் செலவானது. இந்தியாவின் மொத்த தோல் உற்பத்தியும், ஒன்றரைக்கோடிக்கும் அதிகமான பூட்ஸுகளாக, 50 லட்சம் ஷுக்களாக, ஏறக்குறைய நான்கு லட்சம் தோலாடைகளாக மாறின. இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட 20 லட்சம் படைவீரர்களுக்குமான கோதுமையும் உணவும் இந்தியாவின் விளைச்சலிலிருந்தே அளிக்கப்பட்டது. அதையும் தாண்டி இந்தியா 40000 டன் உணவுப்பொருட்களை போர்முனைகளுக்கு ஏற்றுமதி செய்தது.

அவை மட்டுமன்றி, புகைவண்டிப்பெட்டிகள், தண்டவாளங்கள், வெடிகுண்டுகள், உருப்பெருக்கிக் கண்ணாடிகள், சாக்கு மூட்டைகள் என்று இங்கிலாந்தின் போர்முனைகளுக்குத் தேவையான அனைத்துப்பொருட்களின் உற்பத்திக்கான முதுகெலும்பாக இந்தியா ஆனது. 2 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி இருந்தது. அதில் பாதி ஸ்டெர்லிங் கடனாக இங்கிலாந்து இந்தியாவிடம் கடன்பட்டது; காலனி நாடு ஒன்றிடத்தில் பிரிட்டன் இவ்வாறு கடன்பட்டது இங்கிலாந்தின் காலனி வரலாற்றில் முதல் முறையாகும்.

போரின் முடிவில் 1 பில்லியன் பவுண்டுகளுக்கான மாபெரும் ஸ்டெர்லிங் கடனை இந்தியாவிற்கு அடைக்க வேண்டிய நாடாக இங்கிலாந்து ஆகியிருந்தது. 1940-இல் இந்திய தளவாடங்கள் மற்றும் உணவுப்பொருட்களை கொள்முதல் செய்ய இங்கிலாந்தின் ஸ்டெர்லிங் பணத்தையே உபயோகப்படுத்தும் உத்தேசத்துடன், இங்கிலாந்து இந்திய ரூபாயின் மதிப்பை பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் மதிப்புடன் ஒன்றாய் இணைத்திருந்தது.

போர் நீடிக்க நீடிக்க இந்திய ரூபாயின் மதிப்பு சடசடவென விழத்தொடங்கியது. பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் அதிக மதிப்பு வாய்ந்ததாக ஆனது. இது வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மிகவும் எரிச்சல் தரும் விஷயமாக ஆனது. ஸ்டெர்லிங் மதிப்புடன் பிணைக்காமலிருந்தால், குறைந்த ஸ்டெர்லின் தந்து அதிக ரூபாய்க்கான பொருளை பிரிட்டன் பெற்றிருக்க முடியும் என்பது அவரது வாதம். ஆனால் உண்மை நிலையை பிரிட்டிஷ் அரசின் இந்திய அரசுச் செயலரான லியோபால்ட் எமெரி அவருக்கு பதிலடியாகச் சொன்னார். “இந்திய ரூபாய் மதிப்புடன் ஸ்டெர்லிங் பிணைக்கப்படாதிருந்தால் அது இங்கிலாந்திற்கு இன்னமும் கேடாய் முடிந்திருக்கும். ஏனென்றால் போர்க்காலத்தில் இந்திய உணவுப்பொருட்களுக்கும், தளவாடங்களுக்கும் இருந்த மதிப்பில் ரூபாயின் மதிப்பு ஸ்டெர்லிங்கின் மதிப்பை விட மூன்று மடங்கு அதிகரித்திருக்கும்”.

பிரிட்டன் அமெரிக்காவிடமும் கடன்பட்டிருந்தது. பெரும் கடனில் மூழ்கிய பிரிட்டன் நிதி நிர்வாகம் போருக்குப்பின் மூழ்கிப்போகும் என அல்லது பெரும் அடி வாங்கும் என்ற பயம் பரவத்தொடங்கியது. பிரிட்டனின் ஸ்டெர்லிங்கிலும் அதனுடன் பிணைத்திருந்த இந்திய ரூபாயிலும் வியாபாரிகள் நம்பிக்கை இழக்கத்தொடங்கினர்.


நன்றி --- சொல்வனம்
http://solvanam.com/?p=16329

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...