காங்கிரஸின் சத்யாக்கிரகத்தை சமாளிப்பது எளிது. ஆயுதமெடுக்கத்துணியும் சுபாஷ் போஸை அப்படி எண்ணி விட முடியாது
----------------------------------------------------------------------------
காலனியாதிக்கத்தின் கடைசி வருடங்கள்: ஆயுதப்போரின் எழுச்சி
----------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------
காலனியாதிக்கத்தின் கடைசி வருடங்கள்: ஆயுதப்போரின் எழுச்சி
----------------------------------------------------------------------------
இந்திய சுதந்திரத்தில் இரண்டாம் உலகப்போரின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
இரண்டாம் உலகப்போரில் இந்திய ராணுவம் பங்கேற்க காங்கிரஸின் ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் பிரிட்டனிற்கு போர் நேரத்தில் இந்திய உள்நாட்டு எழுச்சியையும் சமாளிக்க வேண்டியதாயிற்று. ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் என்று காந்தியின் சாத்வீக போராட்டங்களை பல வருடங்களாக வெற்றிகரமாக எதிர்கொண்டு வந்திருந்த காலனீய அரசுக்கு புதியதாக ஒரு கடும் சவால் முளைத்தது.
அந்த சவாலின் பெயர் சுபாஷ் சந்திர போஸ். துடிப்பும் உத்வேகமும் தலைமைப்பண்புகளும் ஒருங்கே வாய்த்திருந்த இந்த இளைஞர் பிரிட்டிஷ் ஆட்சியை வன்முறையில் தூக்கி எறியவும் தயாராகவே இருந்தார். மக்களின் பேராதரவைப்பெற்று காங்கிரஸ் தலைமையை இரண்டாம் உலகப்போரின் துவக்கத்தில் போஸ் வென்றது காலனீய அரசுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. பின்னர் காங்கிரஸின் தலைமையிலிருந்து அவர் விலகினாலும், கட்டுக்கோப்பான தலைமை ஒன்றின் கீழ் இந்தியரில் 2 சதவீதம் பேர் ஆயுதமேந்தத்திரண்டால் கூட பிரிட்டிஷ் ராஜ்யம் தாங்காது என்பது காலனி அரசுக்கு புரிந்தே இருந்தது.
1940-இல் வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து பிரதமமந்திரியானதைத் தொடர்ந்து பயிற்சியும் திறமையும் மிக்க இந்திய ராணுவத்தினரை இந்தியாவிலிருந்து அகற்றுவது காலனி அரசுக்கு முக்கியக் கடமையானது. உள்நாட்டில் அவர்களில் ஒரு பகுதியினர் தமக்கு எதிராகத்திரும்பினால் கூட இந்தியாவைத் தக்க வைக்க முடியாது என்பது மட்டுமல்ல, உலகப் போரின் தோல்வியில் இருந்து இங்கிலாந்தே தப்ப முடியாது என்பதும் சர்ச்சிலுக்கு தெரிந்திருந்தது. ஏனெனில் இங்கிலாந்தின் போர்முனைகளுக்குத் தேவையான மணற்சாக்கு மூட்டைகளிலிருந்து, அரிசி, கோதுமை, உணவுப்பொருட்கள், ராணுவத் தளவாடங்கள் என்று அத்தனை போர்க்காலப்பொருட்களுக்குமான உற்பத்தி மற்றும் வினியோகத்துக்கான ஆதார கேந்திரமாக இந்தியா விளங்கியது.
சாத்வீக காங்கிரஸின் சத்யாக்கிரகத்தை சமாளிப்பது எளிது. ஆயுதமெடுக்கத்துணியும் சுபாஷ் போஸை அப்படி எண்ணி விட முடியாது என்பதால் சுபாஷ் போஸைக் கொலை செய்ய சர்ச்சிலின் போர்க்கால மந்திரிசபை ஆணை பிறப்பித்தது. சுபாஷ் ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்குத் தப்பினார்.
1942- மே மாதம் சுபாஷ் சந்திர போஸ் ஹிட்லரைச் சந்தித்துப்பேசினார். ஹிட்லரின் சுயசரிதையில் (Mein Kampf) இந்தியரை இழிவுபடுத்துவதாக உள்ள பகுதிகளை நீக்கச்சொல்லிக் கேட்டார். ஹிட்லரோ இந்தியர்கள் ஒரு தேசமாய் இணைய நூறு அல்லது இருநூறு வருடங்கள் ஆகும் என்று சொல்லி காது புளிக்கும் நீண்டதொரு சொற்பொழிவை நிகழ்த்த, ஜெர்மனியிடமிருந்து எந்த உதவியும் கிடைக்குமென்ற நம்பிக்கை இழந்து சுபாஷ் போஸ் வெளியேறினார். ”ஹிட்லருடன் சில நிமிடங்கள் கூட எதைப்பற்றியும் விவாதிப்பது யாராலும் முடியாத காரியம்” என்று விரக்தியுடன் பிறகு குறிப்பிட்டிருக்கிறார். அதற்குப்பின் ஐரோப்பாவில் இருப்பதில் பயனில்லை என்று, ஜெர்மனியின் நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்து மடகாஸ்கரில் ஜப்பானிய நீர்மூழ்கிக்கு மாறி கடலுக்கடியிலேயே மேலும் மூன்று மாதம் பயணித்து சுமத்ரா தீவுகளுக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து ஜப்பானுக்குப் போய் ஜப்பானியப் பிரதம மந்திரியைச்சந்தித்து அவரது ஆதரவை வென்றார். பின்னர் சிங்கப்பூருக்கு வந்து அங்கே செயலிழந்து கிடந்த இந்திய தேசிய ராணுவத்தின் தலைமையை ஏற்று பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு பெரும் ராணுவத்தைத்திரட்டும் பணியில் ஈடுபடத்துவங்கினார்.
அன்றைய பர்மிய நாட்டின் தலைவர் பா-மாவ் போஸ் குறித்துச்சொல்கையில் “போஸ் ஆழமாகப் பேசத்தொடங்கினால் இன்னொரு சக மனிதரிடம் பேசுவது போல் நீங்கள் உணர மாட்டீர்கள்; மாறாக, நம்மை விடப் பல மடங்கு பிரம்மாண்டமான, அமானுஷ்யமான, பலகாலம் அடக்கப்பட்ட ஆதார சக்தி ஒன்று திடீரென உடைப்பெடுத்துப் பெருகினால் எப்படி இருக்குமோ அப்படி உணர்வீர்கள்” என்றார்.
சுபாஷ் போகுமிடத்திலெல்லாம் அவர் பேச்சைக்கேட்டு, குடும்பப் பெண்கள் காதிலும் கழுத்திலும் போட்டிருக்கும் அத்தனை நகைகளையும் அணிகலன்களையும் கழற்றி நாட்டு விடுதலைக்கு சமர்ப்பித்தார்கள் என்கிறார் வரலாற்றாய்வாளர் பீட்டர் ஃபே. சுபாஷின் அறைகூவல் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. தென்கோடியிலிருந்து முத்துராமலிங்கத்தேவரின் முனைப்பில் பல்லாயிரக்கணக்கான தீரர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் சேர சிங்கப்பூர் சென்றனர்.
ஆனால் இந்திய தேசிய ராணுவம் ஒரு முழுப்பயிற்சி பெற்ற ராணுவமாகவோ அல்லது பிரிட்டிஷாரை எதிர்க்கும் அளவுக்கு ஆயுத பலம் வாய்ந்ததாகவோ உருவெடுக்க முடியவில்லை. இந்தியாவை நோக்கி படைதிரண்டு வந்தவர்களில் பத்து சதவீதம் பேரே உயிர் பிழைத்து இந்தியாவிற்குள் வர முடிந்தது. ஆனால் சாதி, மதப்பிரிவினைகளைத்தாண்டி தேசியவாத வேகத்தில் மக்களை இணைப்பதில் இந்திய தேசிய ராணுவம் பெரும் வெற்றி பெற்றது.
போரின் முடிவில் 1945 நவம்பர் மாதம் இந்திய தேசிய ராணுவக் கமாண்டர்கள் மூவர் பிரிட்டிஷ் ராணுவத்தால் ராஜதுரோகக்குற்றத்திற்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டு ஆயுள் தண்டனையாக நாடுகடத்தப்பட வேண்டும் எனத்தீர்ப்பு வழங்கப்பட்டது. அம்மூவர்: பிரேம் குமார் செகல் என்கிற இந்து, ஷா நவாஸ் கான்[1] என்கிற இஸ்லாமியர், குருபக் சிங் தில்லன் என்கிற சீக்கியர். ஆயுதமேந்தி பிரிட்டிஷாருக்கு எதிராகப் போரிட்ட இந்த மூவரையும் விடுவிக்க முன்வந்த வழக்கறிஞர்களில் அஹிம்சாவாதியான காந்தியின் சீடர் ஒருவரும் இருந்தார்: அவர் பெயர் ஜவஹர்லால் நேரு.
இந்த விசாரணை நடக்க நடக்க, நாடே கொந்தளிக்கத்தொடங்கியது. 1946 பிப்ரவரியில் இந்தியக் கடற்படைக்கப்பல்கள் யூனியன் ஜாக் கொடியை இறக்கி விட்டு, காங்கிரஸ் கொடியை ஏற்றி பம்பாய்க் கடற்கரையை ரோந்து வரத்தொடங்கின. தீ போல் இந்த எதிர்ப்பு பல துறைமுகங்களுக்கும் பரவியது. 1857-க்குப்பின் இந்திய ராணுவம் முதன்முறையாக பிரிட்டிஷாருக்கு எதிராகத் திரண்டெழுவது கண்ட பிரிட்டிஷ் தலைமைக் கமாண்டர் ஆஷின்லெக் அவசர அவசரமாக இந்திய தேசிய ராணுவத்தின் மூன்று கமாண்டர்களையும் விடுதலை செய்தார்.
ஆனால் ஒன்று நிச்சயமாக உறுதி ஆகி விட்டிருந்தது. உலகப்போரின் முடிவில் ஆயுதபலத்தினால் இந்தியாவை அடக்கி வைப்பது இயலாத காரியம் என்று தெளிவாகப் புலப்படத்தொடங்கி விட்டது. இந்திய ராணுவம் துப்பாக்கி முனைகளை காலனீயம் நோக்கித்திருப்பத் தொடங்கிய கணத்தில், பிரிட்டிஷ் காலனீய அதிகார வட்டத்தின் அச்சம் முழுமையடைந்திருந்தது.
நன்றி --- சொல்வனம்
http://solvanam.com/?p=16329
http://solvanam.com/?p=16329
No comments:
Post a Comment