Tuesday, 8 August 2017

பிரிட்டிஷ் இந்தியாவில் பஞ்சம்

ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது உண்மையில் அதன் சோற்றுக்கணக்குடன் சம்பந்தப்பட்டது என்பது பிரிட்டிஷ் காலனீய வரலாற்றைப்பார்த்தாலே எளிதில் புரியக்கூடியது. இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை பிரிட்டிஷ் இந்தியாவில் எங்காவது ஓரிடத்தில் பஞ்சமும் பட்டினிச்சாவுகளும் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தன. சுதந்திரம் இல்லாத நாட்டில் ”வெறும்” சோற்றுக்குக்கூட உத்தரவாதம் இல்லாமல் சொல்லக்கூசும் அளவுக்கு பஞ்சமும் பட்டினியும் வழமையானதற்கு ஆதாரக் காரணம், பிரிட்டிஷ்காரர்களின் ப்ராட்டஸ்டண்ட் கிறித்துவத்தில் ஊறி வளர்ந்திருந்த உயர் இனவாதம்.

ப்ராட்ஸ்டண்ட் கிறித்துவம் (சீர்திருத்தசபை) என்று சொல்லக்காரணம் இருக்கிறது. ப்ராட்டஸ்டண்ட் இன வெறுப்பு ஜெர்மனியில் யூதர்களை அழித்தது போலவே, இந்தியாவிலும் இந்தியர்களை நிர்த்தாட்சண்யமாக அழித்தொழித்தது. இந்த இன உயர்வு எண்ண ஓட்டத்திற்கும் இனவெறிப்போக்கிற்கும் பிராட்டஸ்டண்ட் மத வளர்ச்சியில் – மார்ட்டின் லூதர் தொடங்கி- ஒரு அறுபடாத தொடர்ச்சி இருக்கிறது. ஜாக்கோபைட்டுகளின் கத்தோலிக்கக்கலவரங்களை முறியடித்து ஒருங்கிணைந்த நாடாக 1700-இல் உருவெடுத்த பிரிட்டனின் உளவியலில் பிராட்டஸ்டண்ட் மேலாதிக்க உணர்வு பெரும்பங்கு வகித்தது.

1943-இன் இந்தியப்பஞ்சங்களைக்குறித்த சர்ச்சிலின் எண்ணம் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன் ஐரிஷ் பகுதியில் உருவான பஞ்சம் குறித்து சர். சார்லஸ் ட்ராவல்யன் கூறியதை அப்படியே ஒத்திருக்கிறது. ”பஞ்சம் என்பது அளவுக்கு அதிகமாக உள்ள மக்கள் தொகையைக்குறைக்கும் ஒன்று” என்று கூறினார் ட்ராவல்யன். இவர் மதராஸ் கவர்னராக 1859-60இல் பணியாற்றியவர். 1862-65 இந்திய நிதியமைச்சராக இருந்தவர். இந்திய மொழிவழிக் கல்வியை ஒழித்து, மனதில் ஆங்கிலேயர்களாக- ஆங்கிலேயர்களுக்கான விசுவாசிகளாக- இந்தியர்களை உருவாக்கும் வகையில் ஆங்கில வழிக் கல்வித்திட்டத்தை அமைக்க வித்திட்ட மெக்காலே பிரபு இவரது நெருங்கிய நண்பர் என்பதும் மெக்காலேயின் சகோதரியை மணந்தவர் என்பதும் குறிப்படத்தக்கவை.

ஐரிஷ் பஞ்சத்தை கடவுளின் தீர்ப்பு என்று குறிப்பிடும் சர்.ட்ராவல்யன் (ஐரிஷ் பகுதி ப்ராட்டஸ்டண்டுகளை எதிர்க்கும் கத்தோலிக்க பிரதேசம் என்பதை நினைவில் கொள்வோம்) ”நாம் எதிர் கொள்ள வேண்டியது பஞ்சம் என்பதன் தீமையையல்ல, (ஐரிஷ் மக்களின்) சுயநலம் மனப்பிறழ்வு ஆகிய சுபாவங்களின் தீமைகளையே” என்று குறிப்பிடுகிறார். இங்கிலாந்தின் கீழிருந்த ஐரிஷ் பிரதேச பஞ்சத்தில் 10 லட்சம் பேர் இறந்தனர். பிரிட்டனோ தன் அரசின் பொறுப்பைக் கைகழுவி பட்டினிச்சாவுகளை ஐரிஷ் மக்கள் தலையிலேயே சுமத்தியது. பாதிக்கப்பட்டவரையே பலிகடா ஆக்கும் அதே ப்ராட்டஸ்டண்ட் ”அறவுணர்வு”, ஒரு நூற்றாண்டு கழித்து பட்டினியில் இறந்து படும் இந்தியர்களின் மீது- குறிப்பாக- வங்காள இந்துக்களின் மீது – சர்ச்சில் காட்டும் வெறுப்பில் எதிரொலிப்பதைக் காணலாம்.

நிராதரவின் பரிதாபத்தின்மேல் வெறுப்பு உமிழும் உளப்போக்கை முழுமையாய்ப் புரிந்து கொள்வது கடினம்தான். ஆனால் அப்படி ஒரு ஒன்று இருப்பது இந்தியாவின் காலனீய ஆட்சியில் பல சமயங்களில் நிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறது.
காலனீய அடிமைக்காலத்தின் கடைசி வருடங்கள் கண்ணீரால் நிரம்பி வழிகின்றன. அதன் ஈரத்தில்தான் சுதந்திரச்செடி முளைவிட்டு எழுந்தது.

உலகத்தின் எந்த மூலையில் நான் அலைக்கழிந்தாலும் கடைசியில் ஒதுங்க நிழல் தரத்தயாராய் இருக்கும் தாயாக அந்தச்செடி வளர்ந்து நிற்கிறது. அந்நிழலின் உருவாக்கத்தில் தன்னைக் கரைத்துக்கொண்டு உரமாகிப்போன ஒவ்வொரு உயிருக்கும் நான் எப்படி நன்றி செலுத்தப்போகிறேன்?
(முற்றும்)

குறிப்பு :
1. ஷா நவாஸ் கான் அரசியல் பேரணிகளில் கலந்து கொண்டு இந்து முஸ்லீம் ஒற்றுமை பற்றி உருக்கமாகப் பேசத்தொடங்கினார். அவ்வகை பேச்சுகளுக்கு இஸ்லாமியர்களிடமிருந்து அவருக்கு கிடைத்த பரிசோ அவரை அதிர்ச்சியடைய வைத்தது. கல்கத்தா மசூதி ஒன்றில் தொழுகை முடித்து அவர் வெளிவரும்போது முஸ்லீம் லீக் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஆதரவுக்கோஷங்களை எழுப்பிக்கொண்டே பாய்ந்து வந்து அவர் கார் மீது கல்லெறிந்து அவரை விரட்டியடித்தார்கள். பிரிவினைக்குப்பின் இந்தியாவில் வாழ்ந்த அவர், இந்திய அரசு சுபாஷின் மறைவு குறித்து ஆராய அமைத்த கமிட்டியிலும் இடம்பெற்றிருந்தார்.

2. வங்காளத்தில் நிலவிய பெரும் பஞ்சத்தை ஆவணபப்டுத்தும் புகைப்படங்களை கீழே இருக்கும் இணைப்புகளில் பார்க்கலாம் :
இந்தக்கட்டுரையின் பல தரவுகளும் செய்திகளும் மதுஸ்ரி முகர்ஜியின் “Churchill’s Secret War” என்கிற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் பேரரசு எப்படி இந்திய சமூகத்தையும் பொருளாதாரத்தையும் சின்னாபின்னப்படுத்தியது என்பதையும், அதற்கு அச்சாணியாக சர்ச்சில் செயல்பட்டதையும் இதுவரை வெளிவராத பல ஆய்வுகளின் மூலமும் மூல ஆதாரத்தரவுகளின் மூலமும் ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார் மதுஸ்ரி முகர்ஜி. அவருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
நன்றி --- சொல்வனம்
http://solvanam.com/?p=16329

No comments:

Post a Comment

காலத்தின் தீர்ப்போ ?

காலத்தின் தீர்ப்போ ? ---------------------------------- தமிழகத்தின் ஆட்சியைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள ஏதோவொரு வகையில் பார்ப்பன...